சென்னை புறநகரான புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம தொலைபேசி மிரட்டலையடுத்து இன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிமலையில் உள்ளது புனித தாமஸ் மவுண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி. இந்த பள்ளிக்கு இன்று காலை 8.30 மணியளவில் இரண்டு மர்ம தொலைபேசி வந்தது. தொலைபேசியில் பேசியவர்கள் பள்ளியில் உள்ள ஒரு அறையில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது இன்னும் சில மணி நேரங்களில் வெடிக்கும் என்றும் கூறினர்.
முதலில் வந்த அழைப்பு சாதாரண தொலைபேசியிலிருந்தும், 2-வதாக வந்த அழைப்பு செல்பேசியிலிருந்தும் பேசியது தெரிய வந்தது. இதுபற்றி பள்ளி நிர்வாகிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் விரைந்து வந்து பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் இது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த சோதனையின் போது பள்ளி திறந்தே இருந்தது. வகுப்புகள் எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன.
பின்னர், இந்த தொலைபேசியை பற்றி விசாரித்த காவல்துறையினர் தொலைபேசியில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு அடையாளத்தில் (Caller-ID) இருந்த எண்ணை வைத்து நங்கநல்லூரைச் சேர்ந்த ஜான் (43), தொரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிஜு (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் வெடிகுண்டு புரளியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.