தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியாவும், சிறிலங்காவும் அறிவித்துள்ள கூட்டு நடவடிக்கை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்க கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும் ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதிதிட்டத்தில் இந்திய அரசு தற்போது கைகோர்த்து உள்ளது.
நேற்றைய தினம் சிறிலங்காவின் அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹித் பொகல்லகாமா, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பின்பு, மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இருநாடுகளின் கூட்டு நடவடிக்கை என்ற திட்டத்தை அறிவித்து உள்ளனர்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டு நடவடிக்கை கூடாது. இந்திய அரசின் நடவடிக்கையை, வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.