அரசியல் சட்ட பிரிவு 355-ஐ திருத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி வழங்கியுள்ள ஆலோசனை சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மன்மோகன் சிங் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோது அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மேனுவல் பர்சோவும் இந்தியாவில் நடைபெறும் கிறிஸ்தவ படுகொலை குறித்து பிரதமரை கேள்வி கேட்டு துளைத்து எடுத்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசும், தமிழக அரசும் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்பட்டு வருவது உலகம் அறிந்த உண்மை. ஆனால் வளைகுடா நாடுகளில் இந்துக்கள் கேவலமாக நடத்தப்படும் போது மைய அரசு வாய் திறப்பது இல்லை. மலேசிய இந்துக்கள் விடயத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டது.
2002ஆம் ஆண்டு டேனிஷ் பிரதமர் ஆண்டர்ஸ் ரஸ்மோசஸ் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாற்றியபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய் திருப்பித் தாக்கினார். ஆனால் தற்போது மன்மோகன் சிங் அசடு வழிந்து, காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருக்கிறார். இந்த தாழ்வு மனப்பான்மை இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் நமது உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் அடகு வைத்துவிட்டதையே காட்டுகிறது.
நமது அரசியல் சாசனம், சிறுபான்மையினர் தங்கள் மதத்தை பிரச்சாரம் செய்யவும், சடங்கு ஆச்சாரங்களை பின்பற்றவும் மட்டுமே உரிமையும், அனுமதியும் வழங்கியுள்ளது. மதம் மாற்றுவதற்கு எவ்வித உரிமையும் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த பகுதிகளை மத்திய அரசே நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உரிமை வழங்கப்பட வேண்டும். அரசியல் சட்ட பிரிவு 355ஐ திருத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆலோசனை வழங்கியுள்ளார். இது சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது" என்று ராம. கோபாலன் கூறியுள்ளார்.