''பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்'' என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்தார்.
சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்கள், பாராளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கோபால்சாமி, பாராளுமன்ற தேர்தல் குறித்து யூகத்தின் அடிப்படையில் நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம் என்றார்.
தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சிறப்பு வசதி செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்த கோபால்சாமி, அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றார்.