மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி (நாளை) முதல் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.
பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசு, மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி (நாளை) முதல் நாடு முழுவதும் அமுல்படுத்துகிறது.
இந்த சட்டம், பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரம் செய்தல், ஊக்கப்படுத்துதல் கூடாது.
புகையிலைப் பொருட்களை கல்வி நிலையங்களுக்கு அருகில் அதாவது 100 மீட்டர் தூரத்திற்குள் விற்பனை செய்வது, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது ஆகியவை தடை செய்யப்படுகிறது.
பொது இடங்கள் என்பது மக்கள் கூடுகின்ற அரங்கங்கள், திறந்த வெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பிளாட்பாரங்கள், வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், திரையரங்குகள், நீதிமன்ற கட்டடங்கள், உணவு விடுதிகள், தங்கும் இடங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை அடங்கும்.
பொது இடத்தின் உரிமையாளர்கள், பொறுப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதிக்க கூடாது. அதோடு "இது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி'' என்றும் ''இங்கு புகை பிடிப்பது குற்றமாகும்'' என்றும் எச்சரிக்கை அறிவிப்பை வைத்திருக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
புகார் தெரிவித்த பின்பு சம்பந்தப்பட்டவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்குண்டான மொத்த அபராதத் தொகையையும் அவரே கட்ட வேண்டும்.
வாகன உரிமம் (லைசென்ஸ்) இல்லாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிப்பது போன்ற அடிப்படையிலேயே இதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஆவார்.