ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னையில் இன்று கிறிஸ்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கத்தில் அனைத்து திருச்சபை சார்பில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை பேராயர் தேவசகாயம் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பேராயர் எஸ்றா சற்குணம், பீட்டர் அல்போன்ஸ், பாதிரியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், கிறிஸ்தவர்களின் மனித நேயமிக்க பணிகளை பிடிக்காமல் இந்துத்துவா அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாற்றினார்.
பா.ஜனதா ஆட்சி செய்யும் ஒரிசா, கர்நாடகா, குஜராத்தில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். நாளை இந்தியாவையே கைப்பற்றினால் என்ன நிலையாகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை கிறிஸ்தவர்களாக பார்க்காமல் மனிதனாக பாருங்கள். மதவெறி பிடித்து ஆடும் குஜராத், ஒரிசா, கர்நாடகா மாநில அரசுகளை கலைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.