அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான் மதக்கலவரங்கள் அதிகம் நடந்துள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
அ.இ.அ.தி.மு.க. சார்பிலே ஜெயலலிதா ஏற்பாடு செய்து நடத்திய இப்தார் விருந்தில் பேசும் போது, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் எந்தவிதமான மதக்கலவரங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததே இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
அதே நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா ஒரு கட்டத்தில் தன்னை மறந்து, "இன்று கூட தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கும், ஒற்று மைக்கும், சகோதர பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது'' என்று கூறியிருக்கிறார். ஏடுகளில் இது வெளிவந்துள்ளது. இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் அவர் கூறியது போல அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலே மதக் கலவரங்களே நடைபெற்றதில்லையா? 6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன், 9.12.1992 "இந்து'' நாளிதழில் வெளிவந்த செய்தி என்ன தெரியுமா?
அயோத்தி சம்பவங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தீயிட்டுக் கொளுத்தி கலவரம் செய்தல், கல் எறிதல், அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய காரியங்களிலே ஈடுபட்ட கூட்டத்தினை கலைக்க முற்பட்டபோது, இன்று தமிழகத்திலே ஏழு இடங்களிலே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் 2 பேர் கொல்லப்பட்டதோடு, 27 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். 9.12.1992 தேதியிட்ட எக்ஸ்பிரஸ் இதழில் அதுபற்றிய செய்திகள் எல்லாம் விரிவாக வந்துள்ளன.
"பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாள் பக்தர்கள் வழிபடும் கோவில்களில் எல்லாம் தகராறு. ஆம்பூரிலே தகராறு-வேலூரிலே தகராறு-வந்தவாசியிலே கலவரம் என்று இப்படி பல இடங்களில் கலவரம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன. திருச்சியிலே பெரிய கலவரம்- மேலப்பாளையத்திலே கலவரம்.
மேலும் பத்திரிகைகளிலே - நாகர்கோவிலில் மகமது ரவூப் என்ற 18 வயது இளைஞர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டபோது, காயம் அடைந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
கோவையிலே கலகக்காரர்கள் சாலை மறியலிலும் கற்களை எறிதலிலும் கூரைக்கு தீ வைப்பதிலும் ஈடுபட்ட போது கோட்டை மேடு பகுதியிலே வழிபடும் இடங்களிலேயும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் "இந்து'' நாளேட்டில் செய்தி.
வேலூரில் கலகக்காரர்கள் ஜெயராம செட்டித் தெருவிலே தாக்கியதோடு, ட்யூப் லைட்டுகளை எல்லாம் உடைத்தார்கள். ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்கும் தீ வைத்தார்கள்.
தஞ்சாவூர் மேலத் திருப்பூந்துறை கிராமத்தில் காவல் துறையினர் 4 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். சோழன் போக்கு வரத்துக்கழகப் பேருந்து ஒன்றை கூட்டத்தினர் சேதப்படுத்த முயன்ற போது காவல் துறையினர் தாக்கினர்.
இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக பா.ஜ.க. சார்பாக வாஜ்பாய் தமிழ் நாட்டிற்கு 6 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையே 23-7-1995 அன்று நியமித்து, அந்தக் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறச்செய்தார். அதிலே ஜெயலலிதா ஆட்சியில் கொடூர குற்றங்கள் புரிந்த தீவிரவாதிகள் கண்டு பிடிக்கப்படவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை. தீவிரவாதிகளுக்கு அ.இ.அ.தி.மு.க.வினர் துணை நின்றதால் காவல் துறையினர் நட வடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.
17-9-1994 அன்று ஜெயலலிதா ஆட்சியிலே தான் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் ராஜகோபாலன் தாக்கப்பட்டார். யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே ஜெயலலிதா ஆட்சியில் 11-10-1994 அன்று மதுரையில் அவருடைய வீட்டின் முன்பாகவே ராஜகோபாலன் கொலையும் செய்யப்பட்டார்.
8-8-1993 அன்று ஜெயலலிதா ஆட்சியிலே தான் சென்னையில் சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமே வெடி மருந்துகளால் தகர்க்கப்பட்டு, 11 பேர் இறந்தனர். 14-4-1995 அன்று சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைமையிடக் கட்டிடம் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலே தான்.
திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் இல்லத்தில் 10-7-1995 அன்று குண்டு வெடித்த சம்பவம் அம்மையாரின் ஆட்சியில் தான்.
1992 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி தலைவர் முனிசாமி என்பவர் கொலை செய்யப்பட்டதும், 15-4-1995 அன்று கோவையில் ராஜேஸ்திரன் கொலை செய்யப்பட்டதும், அதே நாளில் சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டை பகுதியில் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்டதும், அதற்கடுத்த நாள் கோவையில் ஜனார்த்தனம் என்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதும், 2-7-1995 அன்று நாகூரில் இந்து முன்னணி தலைவரின் மனைவி தங்கம் என்பவர் பார்சல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேதான்.
ஆனால் இவ்வளவையும் மறைத்து விட்டு, ஜெயலலிதா தொடர்ந்து தான் எவ்வெப்போதெல்லாம் தமிழகத்திலே ஆட்சித்தலைவியாக இருந்தாரோ, அப்போதெல்லாம் வன்முறையோ, கலவரங்களோ நடைபெற்றதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.