இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே? என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே?
தி.மு.க. தொடக்கம் முதல் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாமென்று நினைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் முக்கியமாக இந்தப் போராட்டத்திற்கு அழைக்க வேண்டுமென்று நினைத்து அழைத்திருக்கலாம். அதனால் என்ன? இலங்கைத் தமிழர்கள் நன்றாக விடயம் தெரிந்தவர்கள்.
அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார்? போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களை தமிழகத் தலைநகரிலே பேரணி நடத்திக் காட்டி, அவர்களுக்காகப் போராடிய கட்சி தி.மு.க. என்பதையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தகட்சி தி.மு.க. என்பதையும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரியவைக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தப் பிரச்சினையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்பது பற்றி சட்டப்பேரவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன். எப்படியோ உண்ணாவிரதப் பந்தலில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடும் போது 23.4.2008 அன்று சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ராமதாஸ்- வரதராஜன் மீது தாக்கு!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய தினம் பேசும் போது, "வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை கடைந்தெடுத்த கயவர்கள் என்று அழைக்கலாமா?'' என்று கேட்டிருக்கிறாரே?
தமிழை அழித்துக் கொண்டிருப்பவர்களை அப்படி அழைக்கலாம். அதே நேரத்தில் தமிழை நான்தான் வாழவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியவாறு, தன்னுடைய பேத்தியை தமிழ்நாட்டுப் பள்ளிகளிலே கூடச் சேர்க்காமல், டெல்லியிலே கொண்டு போய் 'மேட்டர் தி கான்வெண்ட்' என்ற ஆங்கில கல்வி நிலையத்தில் படிக்க வைப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது என்றும் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
"சன் பிக்சர்ஸ்'' நிறுவனம் தயாரித்த படத்தை வெளியிடுவது குறித்து பிரச்சினைகள் முடிவுற்று, அந்தப்படம் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டு விட்டதாக அவர்கள் பத்திரிகைகளிலேயே செய்திகளும் வந்த பிறகு, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராஜன் கண்டன அறிக்கை விடுத்துள்ளாரே?
பட்டியலில் தங்கள் கட்சியின் பெயர் விடுபட்டு விடக்கூடாதே என்பதற்காக அந்த அறிக்கை விடப்பட்டிருக்கலாம்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவைகளை சாதாரண ஏழை எளிய பொதுமக்கள் வரவேற்கின்ற நிலையில்- ஒரு சில அரசியல் கட்சித்தலைவர்கள் அந்தத் திட்டங்களுக்கு குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?
இந்தத் திட்டங்களுக்கு குறை சொல்கின்ற கட்சிகள் எல்லாம் அடுத்து வரவிருக்கின்ற தேர்தலில் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவதற்குத் தயாராக இருக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கொண்டு வந்து விட்டதே என்ற ஆதங்கத்தில் தான் அதற்கு குறை சொல்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு திட்டத்தின் மீது எந்தக் குறையும் இல்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.