சிறிலங்க தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம்சாற்றியுள்ள வைகோ, இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி அக்டோபர் 10ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிறிலங்க தீவில் சிங்கள இனவாத அரசு, கடந்த 50 ஆண்டுகாலமாக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது.
ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந் துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.
இந்நிலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறிலங்க அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு ராணுவ உதவியும், தளவாடங்களும், ராடார்களும் தந்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களையும், நிபுணர்களையும் சிறிலங்க ராணுவ தாக்குதலுக்கு உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது செப்டம்பர் 9ஆம் தேதி வன்னியில் நடைபெற்ற சண்டையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
சிறிலங்க தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டுவதோடு தமிழ் இனத்துக்கு இந்திய அரசு செய்யும் இந்த மன்னிக்க முடியாத துரோகத்துக்கு கண்டனம் தெரிவிக்கவும் இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அக்டோபர் 10ஆம் தேதி காலை 11 மணியளவில் என்னுடைய தலைமையில் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டுச் சென்று உத்தமர் காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) அமைந்துள்ள மத்திய அரசின் அலுவலகமான வருமானவரித் துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
மறியல் போராட்டத்தைக் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். பொருளாளர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சி.இ.சத்யா, துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர். கட்சியின் முன்னணியினரும், தோழர்களும் பங்கேற்க இருக்கும் இந்த அறப்போருக்குத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.