சமூக ஒற்றுமையை வளர்ப்போம் : தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து!
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (14:51 IST)
காலம் காலமாக தமிழகத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் பேணிவரும் சமய நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் இத்திருநாள் மேலும் உரமூட்டுகிறது என்றும் அந்தப் பண்புகளை மேன் மேலும் வளர்த்தெடுக்க இந்நன்னாளில் சூளுரைப்போம் என்றும் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா : ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈதுல்-பித்ர் பண்டிகையில் ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் ஏற்பட வேண்டும். அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா: ரமலான் மாதத்தில் இறைக் கட்டளைப்படி மூன்று செயல்களை ஒரு சேரச் செய்கின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. அதாவது நோன்பு நோற்பது, ஐந்து வேளை தொழுகை செய்வது, ஏழைகளுக்கு நன்கொடை வழங்குவது. இதில் நோன்பு என்பது உண்ணாமல், பருகாமல் எந்த அளவுக்கு இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, அதை யாருக்காக கடை பிடிக்கிறோம் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்பதே மேலானது.
உண்ண உணவு கிடைக்காத ஏழைகளின் மன நிலையை உணர வைப்பது ரமலான் நோன்பின் தலையாய நோக்கம் ஆகும். வசதியானவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றார்களோ, அதே போல் ஏழை எளியவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது இஸ்லாமியர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.இந்நோன்பு அனைத்து இஸ்லாமியர்களுக்கு ஏற்றமும், இன்பமும் நல்கட்டும். மன அமைதியை தரட்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலர வழி வகுக்கட்டும் என்று வாழ்த்தி மீண்டும் எனது உளமார்ந்த "ஈத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு: இஸ்லாத்தில் அருளியுள்ள ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான இப்பெருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பு இருந்து ஏழை எளியோருக்கு உதவிடும் (ஜஹாத்) கடமையை வலியுறுத்தும் உன்னதத் திருவிழா ரம்ஜான்.இந்நன்னாளில் அண்ணல் நபிகள் நாயகம் உலகுக்கு போதித்த மனித நேயம், அன்புவழி, நல்லொழுக்கம், அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை நினைவில் ஏற்று, நாட்டில் பல்வேறு மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்று கூறி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ: முப்பது நாட்கள் நோன்பிருந்து மாண்புற்ற மனித புனிதர்களாக இறை வணக்கத்தில் ஈடுபடும் முன்னர் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய பிதுர் எனும் கொடையை வழங்கிய பின்னரே தொழுகையை மேற்கொள்வது இந்நாளின் தனிச் சிறப்பாகும்.
காலம் காலமாக தமிழகத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் பேணிவரும் சமயநல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் இத்திருநாள் மேலும் உரமூட்டுகிறது. அந்தப் பண்புகளை மேன் மேலும் வளர்த்தெடுக்க இந்நன்னாளில் சூளுரைப்போம்.
புதுச்சேரி முதலமைச்சர் வைதிலிங்கம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் கட்டளைப்படி நெறிமுறை தவறாது வாழ்த்து வரும் இஸ்லாமிய சகோதரர்களின் அன்பும், சகோதர மனப்பான்மையும், ஒற்றுமை உணர்வும் போற்றத்தக்கது. அவர்கள் இறைவன் கருணையால் எல்லா நலன்களையும் பெற வாழ்த்துகிறேன்.
இதேபோல், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் உள்பட பலரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.