கடுமையாக உழைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கிய போனசையே அறிவித்துள்ளது வருத்தத்திற்குரியது என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஏ.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," 2007-2008ஆம் ஆண்டுக்கான போனஸ், வெகுமதி தொகை சேர்த்து 25 விழுக்காடு வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பெரும்பாலான சங்கங்கள் அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுத்துரைத்தன.
போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் கூடுதலாக உழைப்பை செலுத்தியுள்ளனர் என்பதை உணர்ந்து அரசு 25 விழுக்காடு போனஸ் வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினோம். பல்வேறு சங்கங்கள் அவரவர் கருத்துகளை முன்வைத்து பேசினர்.
அமைச்சர் 20 விழுக்காடு போனஸ் அறிவித்துள்ளார். இந்த போனஸ் அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது என்றாலும், தொழிலாளர்கள் கடின உழைப்பை செலுத்தியிருக்கிற நிலையில் கடந்த காலங்களில் ஆண்டுதோறும் அரை சதம், ஒரு சதம் என்று வழங்கி வந்தது போன்று இந்த ஆண்டும் வழங்கியிருக்க வேண்டும்.
கடுமையாக உழைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியதையே அறிவித்துள்ளது வருத்தத்திற்குரியது என சி.ஐ.டி.யு. தெரிவித்துக்கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.