தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா செயல்படக் கூடாது என்று சென்னை உரிமையியல் நடுவர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஜூன் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தேர்தலை எதிர்த்து இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னை உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே உறுப்பினர்களுக்கான தேர்தலை அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப் போவதாக கடந்த 16ஆம் தேதி இயக்குனர் சங்கம் அறிவித்தது.
இதை எதிர்த்தும் ஆர்.சி.சக்தி, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ''தனி அதிகாரி நியமித்து தேர்தலை முறையாக நடத்தவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த இரு மனுக்களும் 7-வது உரிமையியல் நடுவர் மன்ற நீதிபதி கிருபாநிதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பாரதிராஜா சங்க தலைவராக பதவி வகிக்கக்கூடாது என்று நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், சங்கத்தின் நடவடிக்கைகளை கவனிக்க வழக்கறிஞர் ஆர்.வித்யாவும், அவருக்கு உதவியாக வழக்கறிஞர் ஜெயசுதாவும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் உடனடியாக சங்க பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். தேர்தல் அதிகாரியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார். அவர் சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்தலை 2 மாதங்களுக்குள் நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.