ஆள்கடத்தல் வழக்கு: பெருந்துறை காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஆட்கடத்தல் வழக்கில் சரியாக செயல்படாத பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், பழனிச்சாமியின் சகோதரர் குகமணி உள்ளிட்டோர் நிலப்பிரச்சனை சம்பந்தமாக கடத்தப்பட்டதாகவும், இந்த கடத்தல் முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தூண்டுதல் பேரில் நடந்ததாகவும் குற்றம்சாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து என்.கே.கே.பி.ராஜா நீக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெருந்துறை காவல்துறையினர் 39 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தனது தீர்பில், இந்த வழக்கில் பெருந்துறை காவல்துறையினர் மெத்ததனமாக இருந்துள்ளனர். இவர்கள் ஆரம்பத்திலேயே சரியாக செயல்பட்டிருந்தால் ஆள்கடத்தல் நடந்திருக்காது.
பலருடைய தூண்டுதல் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. காவல்துறையினர் மனசாட்சிக்கும் கூட பயப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து பெருந்துறையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெருந்துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.ராமசாமி கோவைக்கும், காவல்துறை ஆய்வாளர் வெற்றிவேந்தேன் ஈரோடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் திடீர் மாற்றம் ஈரோடு மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.