தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும், மின் தட்டுப்பாடு நிலவரம் குறித்தும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்!
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 83 மெகாவாட் மின் உற்பத்திக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 560 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங் களுக்கே கருணாநிதி அனுமதி அளித்துள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மின் உற்பத்தித் திட்டங்கள் இருந்தால்தான் மின் தட்டுப்பாடு வராது. மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் முதல்வர் கருணாநிதியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தான்.
1991 முதல் இன்று வரை இருவரும் 643 மெகாவாட் மின்சார உற்பத்தி அளவுக்கே அனுமதி அளித்துள்ளனர். இந்த 17 ஆண்டுகளில் மின் தேவை 4,875 மெகாவாட்டிலிருந்து 9,567 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மின் பற்றாக்குறை எவ்வளவு என்பது குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 1000 மெகா வாட்டிலிருந்து 3,500 மெகாவாட் வரை பற்றாக்குறை என்று பத்திரிகையில் செய்திகள் வருகின்றன. ஒரு நாணயமான அரசு எவ்வளவு பற்றாக்குறை என்பதையாவது மக்களுக்கு அறிவிக்க வேண்டாமா?
மின்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்றதன் பலன் என்ன? இதர மாநிலங் களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறதா? மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
இன்றியமையாத தேவையான மின்சாரத்தில் எவ்வளவு பற்றாக்குறை என்பதையும், அவற்றை நிவர்த்தி செய்ய எத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்பதையும், எவ்வளவு காலத்தில் மின்சார நெருக்கடி தீரும் என்பதையும் அரசு வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.