திருப்பூரில் பனியன் கம்பெனி உரிமையாளரும், அவரது மகனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
திருப்பூர் கொங்கு சாலையில் இன்று அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் எண்ணத்துடன் காருக்கு அருகே சென்றனர்.
ஆனால் காரின் பின் இருக்கையில் சுமார் 55 வயதுடையவர் ரத்தக் காயங்களுடன் இறந்த நிலையில் காணப்பட்டார். காருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாத நிலையில் உள்ளே பிணமிருப்பதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து கார் கதவை உடைத்து உடலை மீட்ட்னார். இதனிடையே காரின் பின் பகுதியில் இருந்த ரத்தம் வழிந்தோடியதை அடுத்து டிக்கியை திறந்து பார்த்தபோது, அதனுள் சாக்கு மூட்டையில் சுமார் 25 வயதுடைய இளைஞரின் பிணம் காணப்பட்டது.
இவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளரும், அவரது மகனும் எனக் கூறப்படுகிறது. இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருப்பூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.