இடஒதுக்கீடு, கரசேவை விவகாரங்களில் சிறுபான்மையினரை அலட்சியப்படுத்தியவர் ஜெயலலிதா தான் என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் இஸ்லாமியர் நலனுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார். தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல ஆணையம், உருது அகாடமி, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது ஆகியவை திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்லாமியர்கள் மீது ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு அன்பு உண்டு என்பதற்கு மத மாற்றத் தடைச்சட்டம் ஒன்று போதும். அவர், ஷாலியத் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். மிலாது நபி விடுமுறையை ரத்து செய்தவர்.
முஸ்லீம் தனி இடஒதுக்கீடு குறித்து ஜெயலலிதா 2004-ம் ஆண்டில் கருத்து தெரிவிக்கையில், "சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சம அளவில் உள்ளனர். மற்ற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே இது சாத்தியமானது அல்ல" என்று கூறியிருந்தார்.
டெல்லியிலே நடந்த கூட்டத்தில் பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் பற்றி ஜெயலலிதா கருத்து தெரிவித்தபோது, " பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை சிறுபான்மையினரும் அனுபவிக்கும் வகையில் நடைமுறைகள் அமைய வேண்டும். அதேநேரம் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல், சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றதல்ல" என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
"கரசேவையை அனுமதிக்கும்படி கேட்டு நீதிமன்றங்களை அணுக தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என்றும் அக்கூட்டத்தில் அவர் கேட்டிருந்தார். இந்த அளவுக்கு சிறுபான்மையினரை அலட்சியப்படுத்திவர் தான் ஜெயலலிதா.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விலக்கு அளிக்கப் போவதாகச் வெளியான செய்தி தவறானது. வேண்டுமென்றே சுயலாபத்திற்காக சிலர் இத்தகவலை பரப்புகின்றனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள கடற்கரை மேலாண்மை திட்டத்திற்கான வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் வரைவினை தமிழில் வெளியிட வேண்டும். அதன் பிறகு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து முறைப்படுத்துவதைப் பற்றி ஆலோசிக்கலாம். அதுவரை நடைமுறைப்படுத்துவதைத் தவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இலவச நிலம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதைப்போல சிலர் பேசுகின்றனர். 2008 -09ஆம் ஆண்டில் ஆகஸ்டு இறுதிவரை 25 ஆயிரத்து 536 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 787 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கும் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 247 ஏக்கர் நிலம், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 52 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கபட்டுள்ளது.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.