சென்னை கே.கே. நகரில் உள்ள மாநகர பேருந்து பணிமனையில் 5 பேருந்துகள் நேற்றிரவு தீப்பிடித்து எரிந்ததற்குக் காரணம், பேருந்து ஒன்றின் முன்பக்க அறிவிப்புப் பலகையின் (ரூட் போர்டு) குழல்விளக்கில் ஏற்பட்ட மின்கசிவே என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த பணிமனையில் நேற்றிரவு பணி முடிந்த பிறகு வழக்கம் போல் டீசல் பிடித்து விட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இரவு 11 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
அங்கு பணியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 7 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
என்றாலும், அதற்குள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு இருந்த 5 பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக தீப்பற்றி எரிந்து விட்டன.
இந்த தீ விபத்து குறித்து கே.கே. நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரு பேருந்தின் பின்புறம் உள்ள ரூட்போர்ட்டில் இருந்த விளக்கில் மின்சார கோளாறு ஏற்பட்டு, அதன் மூலம் தீ பிடித்திருப்பது தெரிய வந்தது. தீயில் எரிந்து சேதம் அடைந்த பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து பாடியில் ஃபைபர் பயன்படுத்தப்பட்டு இருந்ததால், தீப் பிடித்ததும் பைபர் வேகமாக எரிந்து உள்ளதும் கண்டறியப்பட்டது.