விடுதிகள் பராமரிப்பில் தனி வட்டாட்சியர்கள், ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் கூட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாக கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 2008-09ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் 2008-09ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மயானப்பாதை அமைத்தல், மாணவ- மாணவியருக்கு கல்வி உதவித் தொகை
வழங்குதல், ஆதிதிராவிட நல விடுதிகள் பராமரித்தல், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, விடுதிகள் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்திட வேண்டுமென தனி வட்டாட்சியர்களுக்கும், ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கும் அமைச்சர் தமிழரசி அறிவுரை வழங்கினார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.