மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்காததை கண்டித்தும், தினமும் கூடுதலாக ஐந்து மணி நேரம் மின்சாரவெட்டை அமல்படுத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் மணப்பாறையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனது ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆணை என்ற ஒரே காரணத்திற்காக, மணப்பாறை அரசு மருத்துவமனையை 300 படுக்கைகள் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு, தி.மு.க. அரசு இதுவரை எந்தவிதமான நிதியையும் ஒதுக்கவில்லை.
மக்களின் உயிர்காக்கும் இது போன்ற முக்கியமான சுகாதாரத் திட்டத்திற்காக அரசியல் சாயம் பூசும் அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டை சேர்த்து ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் மின்சார வெட்டு இருப்பதாக திருச்சியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், மின்துறைதுறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ மின்சாரா உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மின்சார வெட்டை நீட்டித்துக் கொண்டே போவதற்குரிய எதிர்மறையான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.
மணப்பாறை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நிதி ஒதுக்காத, தினமும் கூடுதலாக ஐந்து மணி நேரம் மின்சாரவெட்டை அமல்படுத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மணப்பாறை அரசு பொது மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.