மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த விரைவு ரயிலில் பயணம் செய்த 5 பேரிடம் கொள்ளையர்கள் மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மும்பையில் இருந்து காட்பாடி வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இந்த ரயிலில் மும்பையில் இருந்து காட்பாடிக்கு வள்ளியூரை சேர்ந்த ஜேம்ஸ் (52), திருவண்ணாமலையை சேர்ந்த ஷாஜகான் (23), அவரது மனைவி அப்ரோஸ் (20), மாமனார் நிஜாம்பாஷா (45) மற்றும் 20 மதிக்கத்தக்க பெண் ஒருவரும் ரயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்த ரயில், சில நிமிடங்கள் நின்று விட்டு புறப்பட்ட போது, மர்ம ஆசாமிகள் 5 பேர் ஜேம்ஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த முன்பதிவு பெட்டியில் ஏறினர். அதன்பிறகு ஜேம்ஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 4 பேரிடமும் பேச்சு கொடுத்தனர்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த மயக்க பிஸ்கட், குளிர்பானங்களை ஜேம்ஸ் உள்பட 5 பேருக்கும் கொடுத்தனர். அவர்களும் அதனை வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் பயணிகள் 5 பேரும் மயங்கி விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்த நகை, பணம், உடமைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரின் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.