காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே துணிகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், ஒரு கண்டெய்னர் லாரியும் இன்று மோதிக்கொண்ட விபத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.
சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு ஆடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது லாரி ஓட்டுனர் திடீரென வண்டியை நிறுத்தினார்.
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது.
முன்னால் சென்ற லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தீபாவளி பண்டிகைக்காக ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லப்பட்ட ஆடைகள் தீயில் எரிந்து நாசமாயின.
விபத்து ஏற்பட்டதும் 2 லாரிகளின் ஓட்டுனர்கள் கோபால் (46), மாடசாமி (23) ஆகியோர் தப்பி விட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.