பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கால அட்டவணைகளில் விளையாட்டு, உடற்பயிற்சி வகுப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அந்த வகுப்புகளில் விளையாட்டு பயிற்சிகளும், உடற்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றனவா என்பது கேள்வியாகவே இருக்கிறது.
சில ஆசிரியர்கள் பாடங்களை அந்த காலத்திற்குள் முடிக்காததாலும், அதற்காக கூடுதல் வகுப்புகள் தேவை என்பதாலும் உடற்பயிற்சி வகுப்புக்களையே பிற பாடங்கள் நடத்த உபயோகப்படுத்திக் கொள்வதும் பல பள்ளிகளில் வாடிக்கையாகி வருகிறது. 100 விழுக்காடு தேர்ச்சி பெறவைக்க வேண்டும். மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டும். அதன்மூலம் பள்ளிகள் நற்பெயரை சம்பாதிப்பதோடு வணிக ரீதியிலும் பெரும் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவு மாணவ மணிகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்குவதில் முடிகிறது.
எனவே உறுதியான உடலும் உறுதியான மனமும் நமது மாணவ செல்வங்களுக்கு அமையவும் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு ஆற்றல் மிக்கவர்களாக மாறவும், வேலை வாய்ப்பின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவும், உலகளாவிய விளையாட்டு போட்டிகளில் நமது நாடு வெற்றிகளை குவிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.
நூற்றுக்கணக்கான தனியார், அரசுப்பள்ளிகளில் விளையாட்டுத்திடல்களே இல்லை என்பதும், நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய ஒன்று. எனவே பயிற்சிகளுக்காக முறையான விளையாட்டுத் திடல்கள் இல்லாத பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கித் தரவேண்டும். மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு உடனடியாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அரசு அதற்கேற்ற வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்'' என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.