சென்னை லயோலா கல்லூரி ஊடக கலைகள்துறை நடத்திய கருத்துக் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.3 விழுக்காடு பேர் அ.இ.அ.தி.மு.க.வுக்கும், 25.8 விழுக்காடு பேர் தி.மு.க.வுக்கும், 19.5 விழுக்காடு பேர் தே.மு.தி.க.வுக்கும் தெரிவித்துள்ளனர்.
சென்னை லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 31 நாடாளுமன்ற தொகுதிகளில் 2,709 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் ஆண்கள் 54 விழுக்காடு பேரும், பெண்கள் 46 விழுக்காடு பேரும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் ரூபாய்க்கு கிலோ அரிசித் திட்டத்திற்கு மக்களிடையே பெருமளவில் ஆதரவு இல்லை. 52 விழுக்காடு பேர் இது தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 22 விழுக்காடு பேர் ஏழை மக்களுக்குப் பயன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் தே.மு.தி.க. தாக்கத்தை ஏற்படுத்தும்!
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர்கள் தொடங்கியுள்ள கட்சிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க தவிர பிற கட்சிகளால் பெரிதாக எந்த தாக்கமும் இருக்காது என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 43.4 விழுக்காடு பேரும், ஓரிரு இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 32.8 விழுக்காடு பேரும், தாக்கமே இருக்காது என 23.8 விழுக்காடு பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 14.8 விழுக்காடு பேரும், மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என 2.5 விழுக்காடு பேரும் தாக்கமே இருக்காது என 82.7 விழுக்காடு பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய டி.ராஜேந்தின் லட்சிய தி.மு.க, கார்த்தின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றால் எந்த தாக்கமும் இருக்காது என முறையே 94.7 விழுக்காடு பேரும், 96.2 விழுக்காடு பேரும் கூறியுள்ளனர்.
ரஜினிக்கு ஆதரவு குறைந்தது!
ரஜினி நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று 4.3 விழுக்காடு பேரும், முழு நேர நடிப்பை மேற்கொள்ளலாம் என 45.8 விழுக்காடு பேரும், அவர் பேசாமல் ஓய்வெடுப்பது நல்லது என்று 32.5 விழுக்காடு பேரும், முழு நேர ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என 10.7 விழுக்காடு பேரும், முழு நேர சமூக சேவையில் ஈடுபடலாம் என 5.2 விழுக்காடு பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள இலவசத் திட்டங்களை 84 விழுக்காடு பேர் வரவேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தொகுதி நிதி படுமோசமாக பயன்படுத்தப்படுவதாக 83 விழுக்காடு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட்டால் வாக்களிக்க மாட்டோம் என 63 விழுக்காடு பேர் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக 87 விழுக்காடு பேர் என தெரிவித்துள்ளனர்.