சென்னை: உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆலோசனைக் குழு கூட்டம் விதிகளின்படி நடைபெறவில்லை என்று கூறியிருக்கின்றபடியால், நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆலோசனைக் குழு மீண்டும் கூடி இது பற்றி முறையாகப் பரிசீலித்து அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அக்குழுவின் பரிந்துரையைப் பெற்ற பிறகு சட்டப்படியும் விதிகளின்படியும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அளிக்கையில், நளினி மற்றும் இருவர் விடுதலை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி அதற்கான மனுவினை ஆலோசனைக் குழு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?
இதற்கு அவரே அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு சிறைத்துறை விதிகளின்படி ஆலோசனைக் குழுவில் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சித் தலைவர்,சிறைத்துறை தலைவர், தலைமை குற்றவியல் நீதிபதி, மண்டல நன்னடத்தை அதிகாரி மற்றும் இரண்டு அலுவல் சாரா உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். இந்தக் குழுவின் செயலர், சம்மந்தப்பட்ட மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் ஆவார்.
நளினி போன்ற ஆயுட் கைதிகள் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த பின், அவர்களின் நன்னடத்தையைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்வது பற்றி இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்ப வேண்டுமென்பது விதியாகும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆலோசனைக் குழு கூட்டம் விதிகளின்படி நடைபெறவில்லை என்று கூறியிருக்கின்றபடியால், நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆலோசனைக் குழு மீண்டும் கூடி இது பற்றி முறையாகப் பரிசீலித்து அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படும். அக்குழுவின் பரிந்துரையைப் பெற்ற பிறகு சட்டப்படியும் விதிகளின்படியும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.