கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற மாணவ, மாணவிகளை கோவையில் மத பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய சென்னையைச் சேர்ந்த பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஈஸ்ட்கோஸ்ட் கிறிஸ்தவ மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் நிர்மலா பீட்டர், பள்ளி முதல்வர் சாலமன் தேவதாஸ் ஆகியோர் மாணவ, மாணவிகளை ஊட்டிக்கு கல்வி சுற்றுலாவுக்காக கடந்த 23ஆம் தேதி அழைத்து சென்றனர்.
கோயமுத்தூருக்கு நேற்று சென்ற அவர்கள், அங்குள்ள காந்திபுரம் லட்சுமி வளாகத்தில் தங்கியிருந்தனர். நேற்று காலை அந்த பகுதியில் ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து மத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த துண்டு பிரசுரத்தில் இந்து கடவுள்களை பற்றி மிகவும் இழிவான வாசகங்கள் அடங்கி இருந்தன.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து பள்ளி தாளாளர் நிர்மலா பீட்டர், தலைமை ஆசிரியர் சாலமன் தேவதாஸ், ஆசிரியர் டேவிட், சுற்றுலா வழிகாட்டி அந்தோணிபாபு, அலுவலக உதவியாளர் ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.
மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவையில் யாரும் மத பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மீறி பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பிரசாரம் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாணவ-மாணவிகள் அனைவரையும் காவல்துறையினர் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியின் தாளாளர் உள்பட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.