''ஒரே ஒரு தொகுதியில் வென்று இவ்வளவு அராஜகம் செய்பவர்கள், கொஞ்சம் கூடுதலாக ஜெயித்தால் நாடு தாங்குமா?'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீடு, அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வடிவேலு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடனே விஜயகாந்த் ஆளும் கட்சி தூண்டுதல் பேரில் வடிவேலு செயல்படுவதாக கூறுகிறார்.
100 அடி சாலையை அகலப்படுத்த தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டபோது ஆளும் கட்சி தூண்டுதல் என்றார். தனக்கு எதிராக எது நடந்தாலும் ஆளும்கட்சி சதி என்பது வழக்கமாகி விட்டது. படத்தில் விஜயகாந்த் வில்லனுடன் மோதுகிறார். நிஜத்தில் காமெடியனுடன் மோதுகிறார்.
நெல்லையில் இவரது கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சி பேனரை கிழித்தனர். திருப்பூரிலும் பேனரை கிழித்தார்கள். அரியலூர் பொதுக்கூட்டத்தில் கலாட்டா செய்தனர். காஞ்சிபுரத்தில் நான் பேசிய கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர்.
இதில் தே.மு.தி.க. கவுன்சிலர் ஒருவர் கைதானார். இந்த நிகழ்வை விஜயகாந்த் கண்டிக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு விஜயகாந்த்தான் காரணம் என்று நான் புகார் அளித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஒரே ஒரு தொகுதியில் வென்று இவ்வளவு அராஜகம் செய்பவர்கள் கொஞ்சம் கூடுதலாக ஜெயித்தால் நாடு தாங்குமா?
நான் கலைஞர் பெயரை சொன்னது இல்லை. ஆனால் விஜயகாந்த் கூறுகிறார். இதில் அரசியல் இலக்கணம் இல்லை. தலைக்கணம்தான் உள்ளது'' என்று விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.