முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு வழங்குகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் மரண தண்டனை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளை அரசு முன்கூட்டியே விடுதலை செய்து வருகிறது என்றும், ஆனால் 16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நளினி கூறியிருந்தார்.
நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும் ஆலோசனை கமிட்டி அதை பரிசீலிக்காமலேயே என்னை விடுதலை செய்ய மறுத்துவிட்டது என்று மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. அப்போது, கடுமையான குற்றங்கள் செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் விவாதம் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி நாகமுத்து தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நாகமுத்து நேற்று அறிவித்தார். இன்று மாலை அளிக்கப்படும் தீர்ப்பில் நளினி விடுதலை செய்யப்படுவாரா? அல்லது இவரது கோரிக்கை நிராகரிக்கப்படுமா? என்பது தெரிந்து விடும்.