தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மட்டும் காணப்படும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'கியூலெக்ஸ்' எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும்போது, மனிதனின் உடலுக்குள் வைரஸ் சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனால், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுடன் இறப்பு ஏற்படலாம்.
பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்களை மட்டும் தாக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது.
இதற்காக, மத்திய அரசு நிறுவனத்தால் தயார் செய்யப்படும் தடுப்பூசி, பெரம்பலூர் மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு அந்நோயின் தாக்கம் குறைந்தது.
இதன்பிறகு, விழுப்புரம், கடலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 17 லட்சம் குழந்தைகளுக்கும், நடப்பாண்டில் மார்ச் மாதம் முடிய பெரம்பலூர் மாவட்டத்தில் 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் மதுரை, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் 22.2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் பள்ளிக்கூடங்களில் இத்தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வரும் நிதியாண்டு (2009-10) முதல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மற்ற மாவட்டங்களில், நோய்த்தாக்கம் இல்லாததால் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தவில்லை என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.