தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த எஸ்.சிவசுப்பிரமணிய ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 13.4.2008 அன்று திருச்செந்தூரில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தவும், அன்றைய தினம் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என்று விளம்பர பலகை வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தேன்.
ஆனால் அவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டதோடு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் 1ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், எனவே சித்திரை மாதம் 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்று அதிகாரி தடுப்பது எங்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும். எனவே சித்திரை 1ஆம் தேதி கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதி மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு விசாரித்த நீதிபதி கே.சந்துரு, மனுவை தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பில், சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும். அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது.
புத்தாண்டை எல்லாத் தரப்பினரும் கொண்டாடுகின்றனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லோரும் அவரவர் கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர்.
முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் (காலண்டர்) மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.
சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்திருப்பது மதசாயம் பூசும் செயலாகும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.