''
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவை கட்டாயம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறினார்.
தேனியில் இரண்டு நாள் நடக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றும், இவர்கள் அமைக்கும் அணியை முறியடிக்கக்கூடிய அணியை உருவாக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என்றார்.
சிறிலங்க தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒத்துப்போகும் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தா.பாண்டியன், ஏற்கனவே நாங்கள் அனைத்து கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியுள்ளோம். அந்த வகையில் கூட்டணி குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை கட்டாயம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணியை முறித்து விட்டீர்களா என்று கேட்டதற்கு, தி.மு.க.வுடன் அரசியல் உறவு முறிந்து விட்டது என்றும் கூட்டணியை நாங்கள் முறித்தது கால் பகுதி என்றால், தி.மு.க.வினர் முறித்தது முக்கால் பகுதி என்றால் மிகையில்லை என்றார்.