தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன் என்றும் ஒருவேளை தோற்று போனால் சினிமாவை விட்டே விலகுவேன் என்றும் நகைக்சுவை நடிகர் வடிவேலு ஆவேசமாக கூறினார்.
கடந்த ஆண்டு நடிகர் வடிவேலுவின் அலுவலகம் தே.மு.தி.க.வினரால் தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இன்று சாட்சியம் அளித்து விட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனது வீடு, அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி தூண்டுதல் காரணமாக நான் புகார் கொடுக்கவில்லை. அது நான் சுயமாக எடுத்த முடிவு. எனக்கு எல்லா கட்சிகளிலும் எல்லா தரப்பு மக்களிடமும் ஆதரவு உண்டு.
இனிமேலும் நான் விடுவதாக இல்லை. தேர்தலில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன். எல்லா கட்சிகளின் ஆதரவோடு சுயேச்சையாக நிற்பேன். தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன். ஒருவேளை நான் தோற்றால் சினிமாவை விட்டே விலகு வேன்.
என்னை மிரட்டி நீதிமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்க மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு வருடமாகவே எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. உன்னை குடும்பத்தோடு கொல்வோம் என்று போனில் பயமுறுத்துகிறார்கள், வெடிகுண்டு வைப்போம் என்றும் மிரட்டுகிறார்கள். தற்போது எனது வீடு, அலுவலகத்தை தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வுக்கு விஜயகாந்த்தே முழுக்க முழுக்க காரணம் என்று வடிவேலு குற்றம்சாற்றினார்.