நடிகர் வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்ட தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், விஜயகாந்த்துக்கு தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் வடிவேலு தனது புகாரில் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தான் மர்ம கும்பல் வீடு, அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது என கூறியிருக்கிறார்.
அவரது புகார் அடிப்படையில் தான் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் முடிவில் தான், விஜயகாந்துக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா? என்பது தெரியவரும். அதன் பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விசாரணை நியாயமான முறையில் நடந்து வருகிறது என்று காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.