''
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகம் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தி.மு.க.வுக்கு 96 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். பெரும்பான்மை இல்லாத அவர்கள் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கு கொடுக்க வேண்டும். இதேபோல புதுச்சேரியிலும் தி.மு.க.வுக்கு ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.
ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக 1985ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் கருணாநிதி பேசிய பேச்சு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தமிழர்களுக்கு ஒரு நாடு, அது தமிழீழ நாடு' என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக 5 உறுதிமொழிகளையும் அவர் அளித்துள்ளார்.
தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தர பாதுகாப்பு, ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவற மாட்டோம், தமிழினத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயார் என்பதே கருணாநிதி அளித்த ஐந்து உறுதிமொழிகள். ஆனால் இப்போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மவுனம் சாதிக்கிறார்.
எனவே இதற்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் சிறிலங்கத் தூதரகம் முன்பு செப்டம்பர் 30ஆம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் கூறினார்.