சென்னை சரவணா ஸ்டோர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்கடையின் உரிமையாளர்கள் மூன்று பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கியது.
சென்னை தியாகராயர்நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் பாத்திரக் கடையில் நடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நடந்த தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக கடைசியின் மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சரவணா ஸ்டோர் உரிமையாளர்கள் எஸ்.கோயகரத்தினம், எஸ்.ராஜரத்தினம், சண்முகதுரை ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ரகுபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி 3 பேரும் தலா ரூ. 25,000க்கான ரொக்கப் பிணை மற்றும் தலா இரு நபர் பிணை உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.