நடிகர் வடிவேலுவின் வீடு மீதும் அலுவலகம் மீதும் நடந்த தாக்குதல் குறித்து தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றை மறுத்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் நடிகர் வடிவேலு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு, அலுவலகம் மீது நேற்று மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விஜயகாந்த் தூண்டுதல் பேரில்தான் நடந்துள்ளது என்று வடிவேலு குற்றம்சாற்றியிருந்தார்.
இது தொடர்பாக வடிவேல் கொடுத்த புகாரின் பேரின் காவல்துறையினர், விஜயகாந்த் உள்பட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தன் மீது நடிகர் வடிவேல் கூறிய குற்றம்சாற்றுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று வடிவேல் தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலே ஆகும். இதற்கு வடிவேலு பகடைக் காயாய் பயன்படுத்தப்பட்டுள்ளார். ஆளும் கட்சியினர் திட்டமிட்டு சதி செய்து என்னை வழக்கில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். இதனை எதிர் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.
அஜீத் ரசிகர்கள் தான் வடிவேல் வீட்டை தாக்கினார்கள் என்று செய்தி வெளியானது. என்றாலும் என்னை இதில் சேர்த்தது தவறு. என் மீது நிறைய பொய் வழக்குகள் போடப்படுகிறது. தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. அதை சீர்குலைக்கவே தற்போது இந்த வழக்கைப் போட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் வரதராஜன் சமீபத்தில் என்னை சந்தித்து பேசினார். விஜயகாந்தை சந்தித்து பேசி விட்டார்களே என்ற ஆத்திரமும் என் மீதான வழக்குக்கு காரணமாக இருக்கலாம். நான் நேர் வழியில் மக்களை சந்திக்கிறேன். ஆனால் சிலர் குறுக்கு மனதுடன் குறுக்கு வழியில் என்னுடன் மோதுகிறார்கள்.
வடிவேல் புகார் தகவலை நான் பெரியதாக நினைக்கவில்லை. ஆனால் சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். 307-வது பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். இப்படி வழக்கு போடுவதால் நான் பயந்து விட மாட்டேன், அந்த வழக்கை சந்திப்பேன்.
வடிவேல் வழக்குக்காக நான் முன் பிணை வாங்க மாட்டேன். இந்த வழக்குகள் சிறு பிள்ளைத்தனமானது
என்று விஜயகாந்த் தெரிவித்தார்.