கோயம்புத்தூர்: ''சிறிலங்கத் தமிழர்களை கொல்ல மத்திய அரசே உதவி வருவது வருத்தம் அளிக்கிறது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு குறித்து வீண் புகார்கள் கூறுகிறார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். இப்போதும் தினமும் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.
தமிழகத்தில் இந்தாண்டு எரிசக்தி மானிய கோரிக்கையின் போது தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் மொத்த உற்பத்தி திறன் 2,970 மெகாவாட் என்றும், கடந்த 2 ஆண்டுகளில் 500 முதல் 600 மெகாவாட் தேவை அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 1,932 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. உற்பத்தி குறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மின்வெட்டுக்கு பொறுப்பேற்று தோல்வியை ஒப்புக்கொண்டு ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும் அல்லது அவரை முதல்வர் கருணாநிதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று அரசே தெரிவிக்கிறது. இந்த நேரத்தில் புதிய திட்டங்களை அறிவிப்பது மோசடி வேலைதான். டி.வி. கொடுக்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
சிறிலங்கத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மவுனத்தை கலைத்து, அவரது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். 1985ல் தமிழீழம் மலர வேண்டும் என்றார். தமிழர்களை கொல்ல மத்திய அரசே உதவி வருவது வருத்தம் அளிக்கிறது என்று ராமதாஸ் கூறினார்.