நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு, அலுவலகம் மீது தாக்குதல் நிகழ்வு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 30 பேர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீடு, அலுவலகம் மீது நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார், இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியது அந்த கும்பல். இதுதொடர்பாக நடிகர் வடிவேலு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், என்வீட்டின் மீதும், அலுவலகத்தின் மீதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் துண்டுதல் பேரில் அவரது ஆதரவாளர்கள் 30 பேர் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீடு மற்றும் அலுவலத்துக்கும் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அடையாளம் தெரியாத 30 பேர் மீது 307 (கொலை முயற்சி), 502/2 (பயங்கர ஆயுதங்களால் மிரட்டல்) 448 (அத்துமீறி நுழைதல்) 336 (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) 147 (கலவரம் செய்தல்) 148 (மரணம் ஏற்படும் வகையில் தாக்குதல் (427 (பொருட்களுக்கு தேசம் ஏற்படுத்துதல்) 323 (காயம் ஏற்படுத்துதல்) ஆகிய 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விஜயகாந்த் மீது சதி செய்தல் (120பி) என்ற பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகரிடம் கேட்டபோது, விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
இதுதொடர்பாக தனிப்படை காவலர்கள் உடனடியாக விசாரணையில் இறங்கினார்கள். காலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் அக்கம்பக்க வீடுகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்தது.
இதனிடையே வடிவேலுவின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.