’'தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. மாவட்ட மகளிர் சங்க மதுஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மேட்டுப்பாளையம் வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இன்னும் 6 மாதம் மின்தடை இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உண்மையை கூறியுள்ளார். ஆனால் தமிழக அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று மக்களை ஏமாற்றி வருகிறார்.
நியாய விலைக்கடைகளில் இரண்டு ரூபாய்க்கு முன்பு அரிசி கொடுத்து வந்தபோது அரிசி கடத்தல் அதிகளவில் நடந்தது. தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தால் இனி அரிசி கடத்தல் அதிகமாக நடைபெறும். தற்போது அறிவித்துள்ள நியாய விலைக் கடையில் 50 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்ற திட்டம் மோசடி திட்டம்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு நியாய விலைக் கடைகளை திறக்க வேண்டும். நியாயமான முறையில் நியாயமான விலையில் மளிகை பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்க வேண்டும். இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அயல்சந்தையில் விலை குறைய வாய்ப்புள்ளது.
எட்டு பேரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு நல்லாட்சி தந்தார் காமராஜர். தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று ராமதாஸ் கூறினார்.