அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை வன்செயல் எதிர்ப்பு நாளாக கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை ஆண்டுதோறும் சர்வதேச வன்செயல் எதிர்ப்பு நாளாக உலகநாடுகள் கொண்டாடிட வேண்டும் என்று அனைத்துலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதையொட்டி அந்நன்னாளில் காந்தி ஜெயந்தி விழாவை தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட, வட்டார, நகர, கிராம அளவில் 'சர்வதேச வன்செயல் எதிர்ப்பு நாள்' என ஆங்காங்கே உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அண்ணல் காந்தியடிகளின் உலக வரலாறு போற்றும் அறநெறி அமைதிப் போராட்டத்தின் வெற்றி, மகத்தான தியாகம், கொள்கை மற்றும் அற்புதமான அரிய போதனைகளை மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நினைவுறுத்தும் வகையில் சர்வமதப் பிரார்த்தனை, ஊர்வலம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் போன்ற விழா நிகழ்ச்சிகளை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நடத்திட வேண்டும் என்று தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.