தனித்துதான் போட்டி: வரதராஜனிடம் விஜயகாந்த் உறுதி!
, சனி, 20 செப்டம்பர் 2008 (11:02 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்றிரவு சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வரதராஜன், தேர்தலில் தனித்து போட்டுயிடப் போவதாக விஜயகாந்த் கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு கூட்டணி தொடர்பாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்தது.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலை என்ன என்று அறிந்து தகவல் தர வேண்டும் என்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்தில் இருந்து எனக்கு செய்தி வந்தது.
அதன் பேரில் விஜயகாந்தை சந்தித்து, மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. நிலை குறித்து கேட்டேன். காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அந்த கட்சிகளுடன் ஏற்கனவே கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை, தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் தெரிவித்தார். எதிர் காலத்தில் உங்கள் கட்சிகளுடன் கலந்து பேசலாம் என்று கூறினார். இந்த தகவலை எங்கள் கட்சியின் தலைமை இடத்துக்கு தெரிவிப்போம் என்று வரதராஜன் தெரிவித்தார்.