ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டப் பணிகள் தொய்வின்றி நடக்கிறது என்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு நிச்சயம் இந்த திட்டத்தால் தண்ணீர் கிடைக்கும்'' என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்படும் நீர்வள திட்ட அலுவலகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டடம், மின்பிரிவு பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டுக்காக இரண்டு கார், 17 ஜீப்புகளை அமைச்சர் துரைமுருகன் இன்று வழங்கினார்.
இந்த வாகனங்கள் சென்னை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், விருதுநகர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய கட்டட, கட்டுமான மற்றும் பராமரிப்பு, மின் கோட்டங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதிய தலைமை செயலகம், கோட்டூர்புரத்தில் நவீன நூலகம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டு விலைவிகித மற்றும் தொழில் நுட்ப டெண்டர் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த வாரத்தில் யார் கட்டடம் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படும். புதிய தலைமை செயலகம் 18 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். 2010-2011ம் ஆண்டு பட்ஜெட் புதிய சட்டமன்றத்தில் வைத்து தாக்கல் செய்யப்படும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. திட்டப்பணிகளும் தொய்வின்றி நடக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு நிச்சயம் இந்த திட்டத்தால் தண்ணீர் கிடைக்கும் என்று துரைமுருகன் கூறினார்.