சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் மூன்று பேரின் பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை தியாகராயர்நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் கடந்த மாதம் 1ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோட்டைச்சாமி, ராமஜெயம் என்ற இரண்டு ஊழியர்கள் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடையின் மேலாளர் செல்வம், மேற்பார்வையாளர் ஜெபசிங் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோக ரத்தனம், ராஜரத்னம், சண்முகத்துரை ஆகியோர் முன்பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து மூன்று பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிணை கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று பேரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் வேளையில் பிணை கொடுப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.