பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்க அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரத்தை வழங்குவது என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், டி.ஜி.எஸ். தினகரன், அண்ணா வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம், குன்னக்குடி வைத்தியநாதன், எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரத்தை ஒரு மனதாக வழங்கப்பட்டது.
தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்க சிறிலங்காவுக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீட்க கருணாநிதி முயற்சி மேற்கொள்ளவில்லை. அண்மையில் நடந்த சார்க் மாநாட்டில் கூட பிரதமர், கச்சத்தீவால் இந்திய மீனவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும், கச்சத் தீவு, அதை சுற்றி உள்ள பகுதிகளில் மீனவர்கள் தங்களது வாழ்வாதார பணிகளை தொடர இந்திய கடல் எல்லையில் இருந்து 16 கடல் மைல் தூரத்துக்கு ரோந்து பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கவும், நெசவாளர் பிரச்சனைக்கு தீர்வு காண தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டின் காரணமாக தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.