''
வன்முறைகள் மூலம் எங்கள் கட்சியினரை மிரட்ட முடியாது'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைகள் மூலம் எங்கள் கட்சியின் நிர்வாகிகளை மிரட்ட முடியாது. எந்த சலசலப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் திப்பிறமலை பஞ்சாயத்து 2-வது வார்டில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அருள்ராஜுக்கு வாக்கு சேகரித்தபோது கோபு என்ற தொண்டரை வெட்டி சாய்த்துள்ளனர்.
அருள்மணி, மகேஷ், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கோபுவை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தேர்தல் தகராறு அல்ல, முன்விரோதம் என்று காவல் துறை பொய்யான தகவல்களை கூறி குற்றவாளிகளை தப்பிக்க உதவுவதாக தெரிகிறது.
இடைத்தேர்தல் காலங்களில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடப்பது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அராஜகத்தினால் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கட்சியின் சார்பில் உத்தரவிட்டிருந்தோம். ஆனாலும், ஆர்வம் மிகுதியால் ஒருசில இடங்களில் கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கோபுவை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிடில் நாகர்கோவிலில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோபுவின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.