முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான ஆட்கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோரை நிலப்பிரச்சனை தொடர்பாக அப்போதைய கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தூண்டுதலின்பேரில் அவரது ஆட்கள் கடத்திச் சென்றதாக புகார் கூறப்பட்டது.
அமைச்சர் ஆட்களால் கடத்தப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி பழனிச்சாமியின் மைத்துனர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து கடத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாற்றப்பட்ட சுந்தர், சுந்தர்ராஜன் உள்ளிட்ட 3 பேருக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. இந்த முன்பிணையை எதிர்த்து பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடத்தல் வழக்கை காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்றும், மூன்று பேருக்கு கொடுக்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, மூன்று பேரின் முன்பிணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த நிலையில் கடத்தல் வழக்கு நீதிபதி ரகுபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆள் கடத்தல் வழக்கில் பெருந்துறை காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளனர். முதல் புகாரிலேயே காவல்துறையினர் மெத்தனம் காட்டியதால்தான் இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆரம்பத்திலேயே காவல்துறையில் ஒழுங்காக செயல்பட்டு இருந்தால் ஆள் கடத்தல் நடந்திருக்காது.
இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள மூன்று பேர் மோசடி செய்து முன்பிணை பெற்றுள்ளனர். இதில் காவல்துறை தரப்பிலும் எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற கவனத்திற்கு வந்த பிறகுதான் மூன்று பேரின் முன்பிணை ரத்து செய்யப்பட்டன. அரசு வழக்கறிஞரிடமும், காவல்துறையினர் சரியாக தகவலை அளிக்காமல் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
உடனடியாக இதில் காவல்துறையினர் தலையிட்டு தவறுகளை களைந்திருந்தால் இந்த பிரச்சினை வளர்ந்திருக்காது. பாதிக் கப்பட்டவர்களை காவல்துறையினர் இதுவரை விசாரிக்கவில்லை. பலருடைய தூண்டுதலின் பேரிலேயே இந்த நிகழ்வு நடந்துள்ளதாக தெரிகிறது. சரியான விசாரணை நடத்தாதது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. காவல்துறையினர் மனசாட்சிக்குகூட பயப்படவில்லை.
எனவே இந்த வழக்கில் யாருக்கும் முன்பிணை வழங்க முடியாது. இவ்வழக்கு விசாரணை இன்னும் ஒரு நிமிடம் கூட பெருந்துறை காவல்துறையினர் கையில் இருக்க கூடாது, இதனால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாற்றுகிறேன். தகுதியான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.
சட்டத்தை மதிக்காத இந்த கும்பல் குறித்தும் முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கடத்தப்பட்ட பின்னணி சொத்து சேதம், யார் யாருக்கு தொடர்பு என்பதையும் விசாரிக்க வேண்டும். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி யார்? அவரை காப்பாற்ற பெருந்துறை காவல்துறையினர் நடந்து கொண்ட முறை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.