சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 51 பேருக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவதற்கான ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை மாநகராட்சியை சேர்ந்த 51 தற்காலிக தொழிலாளர்கள் மாநகராட்சி மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 2,550 ஊதிய விகிதத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவதற்கான ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தெரு மின்விளக்குகளை சரி செய்யும் பணிகளையும், பழுதடைந்த புதைமின் கம்பி மாற்றி அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி 4,793 புதிய தெரு மின்விளக்குகளும், 115 கி.மீ. நீளத்திற்கு புதைமின் வடங்கள் புதைக்கும் பணிகளும், 60 சூரியஒளி மூலம் இயங்கும் தெரு விளக்குகளும், 25 உயர் கோபுர மின்விளக்குகளும், 3,940 எண்ணிக்கையிலான பழைய சோடியம் ஆவி விளக்குகள் மாற்றி அமைக்கும் பணிகளும், 746 தானியங்கி விசைப்பான்கள் என 10 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.