இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
''வரும் தேர்தலில் இடதுசாரிகள் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது'' என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஒரு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், அண்ணாவின் 100வது பிறந்தநாளில் இந்த திட்டத்தை நிறைவேற்றியது அவருக்கு மகுடம் சூட்டுவதாகும். முதல்வர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன் 1967 ம் ஆண்டு அண்ணா அளித் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நான் தலைவணங்குகிறேன். பாரட்டுகிறேன்.
இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். இதை பலர் கிண்டல் செய்தனர். டெல்லியில் கூட காங்கிரஸ் கட்சியினர் என்னிடம் இந்த திட்டம் எப்படி சாத்தியம் என்றனர். நானும் முடியாது என்றுதான் சொன்னேன். ஆனால் தமிழக முதல்வர் இன்று முடித்து காட்டியுள்ளார். இதை தற்போது பிற மாநிலங்கள் நடைமுறைபடுத்துகின்றது.
இதேபோல் சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் அணு சக்தி ஒப்பந்தத்தை செயலாக்க நினைக்கின்றனர். அதற்கு பலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். அணு சக்தி மூலம் மட்டுமே தேவையான மின்சாரம் கிடைக்கும். இதற்காக அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் போடப்படுகிறது.
அணுசக்திக்கு பிள்ளையார் சுழி போட்டதே பா.ஜ.க தான் தற்போது அவர்களே இதை எதிர்கின்றனர். இவர்களுடன் இடதுசாரி கட்சிகளும் இணைந்து எதிர்கிறது. தேர்தலில் இடதுசாரிகள் தனியாக ஒரு தொகுதியில் நின்றால் டெபாசிட் கூட பெறமுடியாது. அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் இன்றும் ஏழு ஆண்டுகளில் 40,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். ஆகவே இந்த திட்டம் கட்டாயம் நிறைவேறும் என்று இளங்கோவன் பேசினார்.