நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 24ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், பிளவிளையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் பட்டா நிலத்தில் கிறிஸ்தவ கோயில் கட்டுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி அளிக்க உத்தரவிடும்படி மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.சிவகுமார், கன்னியாகுமரி ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா 8 வாரத்தில் கோரிக்கை மனுவை பரிசீலித்து கிறிஸ்தவ கோயில் கட்டுவதற்கு தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் ஜோதி நிர்மலா நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து மனுதாரர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கன்னியாகுமரி ஆட்சியர் ஆஜராகவில்லை என்றும் மீண்டும் ஏன் ஆட்சியத் தலைவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், தொலைநகல் (பேக்ஸ்) மூலம் தகவல் அனுப்பப்பட்டது என்றும் ஒருவேளை அவருக்கு இதுபற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி சிவகுமார், ஒரு அதிகாரிக்கு தகவல் அனுப்பப்பட்டாலே அவருக்கு கொடுத்ததாகத்தான் கருத வேண்டும். இதுபோன்று வராமல் இருப்பது நல்லதல்ல என்று நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் இதற்கான தாக்கீது அனுப்பவும் நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.