''
உச்ச நீதிமன்ற உத்தரவால் உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பிற்பட்ட வகுப்பினர் இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினையை நீங்கள் உடனடியாக சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், இதர பிற்பட்டோர் வகுப்பினருக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் மூலம் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டது. பல்வேறு தடைகளை தாண்டி வந்த பிறகு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சும் இந்த சட்டத்துக்கு அனுமதி அளித்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க முன்னேற்றத்தை எட்டிய பிறகும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில் கடுமையான முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை 3 ஆண்டுகளில் நிறைவேற்றவும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்தது. இந்த திட்டம் நமக்கு ஏற்புடையது அல்ல. இது சமூக நீதியின் அடிப்படையில் கொள்கையை நிலைநாட்டுவதாக இல்லை. ஆனாலும் இந்திய அரசு நடப்பு கல்வி ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் 9 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த தொடங்கியது.
இட ஒதுக்கீட்டில் வசதி படைத்தோர் (கிரீமிலேயர்) விவகாரத்தில் எழுப்பப்படும் விவகாரத்தை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். பெற்றோரின் ஆண்டு வருமானத்தையோ பொருளாதார நிலையையோ கணக்கில் எடுக்கக்கூடாது என்று வற்புறுத்தி வருகிறோம். இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் பிரிவினர் நிராகரிக்கப்படுவதால் உயர்கல்வி நிறுவனங்களில் 400 இடங்கள் இந்த ஆண்டு இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
நிரப்பப்படாத இந்த இடங்களில் பொது பிரிவினரில் இருந்து மாணவர்களை சேர்க்க தடை இல்லை என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஒதுக்கீட்டில் 3ல் ஒரு பகுதி மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளது. 'கிரீமிலேயர்' பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தவர் என்ற தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் சிபாரிசும், சரிவர கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவைகள் எல்லாம் இட ஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து விட செய்துள்ளது. நிரப்பப்படாத காலி இடங்களையும் உருவாக்கி விட்டது. இடஒதுக்கீட்டில் தங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இதர பிற்பட்ட வகுப்பினர் இருக்கிறார்கள்.
இந்த பிரச்சினைக்கு சட்டப்படி தீர்வு காண வேண்டும். கிரீமிலேயர் விவகாரம் இதர பிற்பட்டோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்க்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடும். எனவே இந்த பிரச்சினையை நீங்கள் உடனடியாக சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்செய்து சமூக நீதியை நிலை நாட்டும்படி கேட்டுக் கொள்கிறோம்'' என்று கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.