சென்னை: தந்தை பெரியாரின் 130வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் கருணாநிதி, அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தந்தை பெரியாரின் 130வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, வேங்கடபதி, அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செல்வராஜ், சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் காங்கிரசார் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
பெரியார் திடலில் உள்ள சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார் படத்துக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில துணை செயலாளர் கருநாகராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.